சிவமகா புராணம்: புராண கதைகள் சொல்வதென்ன
தர்ம_ஸம்ஹிதை - பகுதி 10
#மன்மதன்_ஆற்றலுக்கு வசப்பட்ட மகேஸ்வரர் கதை
========================
மகரிஷிகளே! வெண்மை, செம்மை, நீலம் முதலிய நிறங்களையுற்றுப் பலவிதரூபங்களையடைந்து சாந்தம், கோபம், குரோதம், இந்திரீய, நிக்கிரகம் இச்சையின்மை ஆகியவற்றையுடைய சிவபெருமானுக்குச் சிருஷ்டி செய்து வைத்து விருப்புண்டாக்கி ஜலமும் பிராணிகளின் இதயமுந்தானமாகவுடைய நாராயணனைச் சிருஷ்டித்தார். அவ்வாறு படைக்கப்பட்ட நாராயணன் தவஞ் செய்து இறுதியில் திருப்பாற்கடலில் அநேக காலஞ்சயனித்திருக்க, அந்நாராயணனது உந்தியினின்று ரஜோ குணத்தால் பிரமன் தோன்றினார். அவர் முதலில் விருக்ஷ முதலிய ஐவகைத் தாமஸ் சிருஷ்டியைச் செய்து பின்னர் மானிடர் முதலான ராஜஸ சிருஷ்டியைச் செய்து இறுதியில் தேவர் முதலிய எண்வகைச் சத்துவ சிருஷ்டியையும், பின்னர் உலகங்கள் தர்மங்கள் பரிபாலனங்கள் ஜீவிதங்கள் ஆகாரங்கள் முதலிய சிருஷ்டிகளையும் செய்தார். அச்சிருஷ்டிகளிலெல்லாம் பரமாத்மா பிரவேசித்து விளங்கினார், இச்செயல்களெல்லாம் முடிந்த பின்னர் நாராயணன் துயிலொழிந்து, தான் சிருஷ்டி காமியாய்யோக நித்திரையில் இருந்தமையால் படைக்கப்பட்டிருக்கும் பிரபஞ்சத்தையும் ஜீவராசிகளையும் கண்டு இச்சகத்து யாரால் படைக்கப்பட்டதென்று ஆலோசித்தார்.
அப்போது ஓர் அக்கினி மயமான தாணுலிங்கம் தோன்றியது. அது ஜ்வாலாகாரமாயும் மகா பயங்கரமாயும் திரிலோகங்களுக்கும் ஒரே ஸ்தம்பாகாரமாயும் ஆதிமத்தியாந்த மறிய வசமில்லாததாயும் அளவிட்டுரைக்க முடியாததாயும் தேஜோமயமாயும் விளங்கியது. பிரம்ம விஷ்ணுக்களிலிருவரும் ஒரு காலத்தில் ஒருவரையொருவர் சந்தித்து "நான் பரம் நான் பரம்" என்று தருக்கெய்தி வாதாடினார்கள். பிறகு கடலிடையே ஜோதி மயமாக விளங்கும் அந்தத் தாணு லிங்கத்தை நோக்கி, 'இங்கிவ்வாறு விளங்குவது யாது?' என்று நினைத்து, "இது நம் மிருவராலும் படைக்கப்பட்டதன்று. இது தானாகவே உண்டானதாகக் காணப்படுகின்றது இது. ஆதலால் நாமிருவரும் ஜெகத்காரணரென்று சொல்லிக் கொள்வது அவலம்!" என்று காலம் நீங்கி இருவரும் சிநேக பாவமாக ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு, 'இப்பொருள் என்ன? இதனது வரலாற்றினை உணர வேண்டும்!' என்று அடிக்கடி யோசித்து, அதைக் கண்டறிவதே நலமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். அப்பொழுது "நான் இதன் அடியைக் காண்பேன்!" என்று விஷ்ணுவும் "முடியைக் காண்பேன்" என்று பிரம்மனும் நியமித்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது அசரீரி "பிரம்ம விஷ்ணுக்களே! இது சிவபெருமானேயன்றி பிறிதன்று அவர் உங்கள் வல்லபத்தையறியக் கருதி ஜ்யோதிர் மயமாக நின்றார். இந்தத் தாணு லிங்கத்தை நீங்கள் பூஜித்தால் மகத்தான இஷ்ட சித்திகளை அடைவீர்கள். புஷ்பம், கந்தம், தூபம், தீபம், நிவேதனம் முதலியவற்றால் தன்னை ஆராதித்தவர்கட்குச் சிவபெருமான் சந்தோஷமுற்றுப் பக்தவத்சலனாதலின் இஷ்ட காமியங்களைக் கொடுத்தருள்வார்" என்று கூறியது உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் மலர் முதலிய பூஜா உபகாரணங்களால் தாணு லிங்கத்தை விதிப்படி பூஜித்து, வேதோக்தமாகத் துதித்து இஷ்டசித்திகளையெல்லாம் அடைந்தார்கள். மற்றொரு பக்கத்தில் சர்வேஸ்வரனும், காமாரியுமாக விளங்குஞ் சிவபெருமானும், தம் தேவியான பார்வதி தேவியாருக்குத் தம் உடலில் பாதி சரீரம் கொடுத்து அர்த்த நாரீஸ்வரர் என்ற பெயரெய்தி அடியவர்கட்கெல்லாம் சேவையளித்துக் கொண்டு விளங்குகிறார்.
மற்றொரு காலத்தில் பார்வதிதேவியை சிவபெருமான் திருமணம் புரிந்து இமாசலத்திலுள்ள ஒரு குகையில் பூதசேனைகளுடன் அநேக காலம் எழுந்தருளியிருந்து விளையாடினார். அப்பொழுது பார்வதி தேவி தனக்கிருக்கும் காளவடிவம் நீக்கிக் கவுரவ வடிவத்தை அடைவதற்கு விரும்பி அதை எவ்வாறு அடைவது என்று யோசித்து, தவஞ் செய்வதாகத் தீர்மானித்தாள். தன் நாயகர் தன் திருமணத்திற்கு முன்னரே கங்கையை ஜடாமுடி மேல் அணிந்திருப்பதால் இதுபோல இன்னும் வேறெவரையேனும் விருப்பமுறாமல், தன் தோழியாகிய உத்தாம குஸுமை என்பவளையும் தன் புதல்வனாகிய வீரகனையும் ஒவ்வொரு வாசலில் காவலாக வைத்து வேறொரு ஸ்திரீயையும் உள்ளே விடக்கூடாதென்று உறுதியாகக் கட்டளையிட்டாள். அவர்கள் அவ்வாறே வாயில் காப்பதாகக் கூறியதும் பார்வதி தேவி தபோவனத்திற்குச் சென்று தடாகங்களுடையதும் அரசர்கள் பூர்வம் வசித்துத் தவஞ் செய்ததும் ஜபந்தியென்னும் பெயருடையதுமான அங்கிருக்கும் ஒரு குகையைக் கண்டு 'இதுவே நல்ல இடம்' என்று துணிந்து அங்கேயே தவஞ்செய்து கொண்டிருந்தாள்.
முனிவர்களே! இவ்வாறு ஜகன்மாதாவாகிய பார்வதிதேவி தவஞ்செய்து கொண்டிருக்கையில், ஆடி என்னும் பெயருடைய அசுரனொருவன் பிரம்மனை நோக்கிப் பலவிதமாகத் தவஞ்செய்ய பிரமன் பிரத்தியக்ஷமாகி, "யாது வரம் வேண்டும்?" என்று கேட்டார் அதற்கு ஆடி அசுரன் "நான் இறவாதிருக்க வரமளிக்க வேண்டும்!" என்று கோரினான். "உனக்கு இவ்வுடம்புடனே இறவாத் தன்மை கைகூடாது. அது கைகூடுவதற்கு ஏதேனுங் காரணங் கோருக!" என்றார்.
வீரகன் பார்வதியின் கோபத்தைப் பார்வையாலேயே உணர்ந்து தாயின் திருவடிகளில் வீழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "தாயே! ஆடி என்னும் அசுரன் மாயையால் சர்வேஸ்வரன் நலிவுறாமல் பிழைத்தது உன் தவப்பலனே, நீயே பாக்யவதி!" என்று கூறினான். அதைக் கேட்டதும் துக்கித்து, "வீரகா! உன் அஜாக்கிரதையாலல்லவா இவ்வளவு தீமைகள் விளைந்தன. ஆதலின் நீ அஞ்ஞானத்துடன் உலகத்தில் சிலாதன் என்னும் வேதியனுக்குப் புத்திரனாகத் தோன்றி பன்னிரண்டு வருஷங்கள் அவனிடம் வளர்ந்து, பின்னர் சாபவிமோசனம் பெற்று அத்தேகத்துடனே எனக்கும் புத்திரனாவாய்!" என்று கூறினாள். அவ்வாறே வீரகன் சிலாத முனிவன் புதல்வனாய் ஜெனித்து, தனக்கு நியமித்துள்ள பன்னிரு வருஷங்களும் தவஞ்செய்து கொண்டிருந்து கிரமமாகப் பார்வதி தேவியாரிடம் மீண்டும் புதல்வனாக வந்து சேர்ந்தான்.
இவ்வாறு சூதமுனிவர் கூறியதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, "சுவாமி! வீரகன் சிலாத புத்திரனாகப் பிறந்த சரிதத்தையுஞ் சொல்லவேண்டும்!" என்று கேட்டார்கள் சூதபுராணிகர் கூறத் தொடங்கினார்.
சிலாதர் என்றது காரணப் பெயர்! அவர் பிள்ளைப் பருவத்தில்கன் வீட்டிற்குப் பிச்சைக்கு வந்த வேதியனது அன்ன பாத்திரத்தில் அவ்வந்தணன் அறியாது ஒரு சிறு கல்லை எறிந்தார். அந்தணன் அச்சிறு கல்லுடன் உணவைப் புசித்தார். அவர் வயது வளருந்தோறும் விவேகவானாகி ஞானம் முதலியன குறைவின்றிப் பெற்றுத் தமது தவப்பலனால் பரமலோகங்களைத் தோழர்களுடன் சென்று பார்த்துவந்தார். யம புரத்தில் அந்தகனது அரசிருக்கைக்கருகே ஒரு பெரும் பாறையிருப்பதை அவர் பார்த்து "இதென்ன இந்நல்ல இடத்தில் பெரும் பாறையிருக்கிறதே!" என்று விசாரித்தார். "உலகத்தில் ஒருவன் சத்பாத்திரமான பிரமாணனது போஜனத்தில் அவிவேகத்தால் கல்லெறிந்தான். அதுவே இப்பெரும் பாறையாக வளர்ந்திருக்கிறது. அவ்வாறு கல்லைப் போட்டவன் மடிந்தபிறகு இவ்வளவையும் எங்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டு அவன் புசிக்க வேண்டும்!" என்றார்கள். அப்பொழுது அவருக்கு இது தன்னுடைய செயலேயென்று தெரிந்து மனந்துடித்து, "இதற்கு ஏதேனும் பரிகாரமுளதோ?" என்று வினவினார் யம கிங்கரர். "அவன் இவ்வளவு பாறையைப் பூமியிலேயே அரைத்துக் குடித்தால் இது கரையும்!" என்றார்கள் அதைத் தெரிந்து கொண்டு சிலாத முனிவர் தம் நகரத்தையடைந்து வினையுடைய பாறையொன்றைக் குறிப்பிட்டு,. "சிவயோகம்!" என்று அதில் சிறிதுடைத்துப் பொடித்துக் கரைத்துக் குடிப்பதுமாக அம்மலைவடிவான பாறையைக் கரைத்து விட்டார். யமபுரத்தில் தனக்காக வளர்ந்திருந்த பாறைச்சிலையை ஹதஞ் செய்த காரணத்தால் சிலாதரெனப் பெயரெய்தினார்.
பின் ஒரு காலத்தில் அவர் சகல வேதாகமங்களையுணர்ந்த சிவஞானச் செல்வராயிருந்தும் புத்திரப் பேறில்லார்க்கு முத்தியில்லை என்பதை உணர்ந்தவராய் பிள்ளைப் பேற்றை விரும்பித் திருவையாற்றிற்குச் சென்றார். அங்கு அவர் அயனரி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சிவபெருமானுடைய திருமுன்னே நின்றுவணங்கி, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் செபித்துப் பஞ்சாக்கினி மத்தியில் ஒரு காலால் நின்று அநேக நாட்கள் தவம் செய்து கொண்டிருந்தார். சிவபெருமான் அத்தவத்திற்கிரங்கி ரிஷப வாகனத்தின் மீது பார்வதி சமேதராய் எழுந்தருளி வந்து, "முனிவனே! நீ விரும்பிய வரத்தைக் கேள்!" என்றார்.
"எம்பெருமானே! அடியேனுக்கு ஒரு சற்புத்திரனைத் தந்தருளவேண்டும்!" என்று சிலாதர் பிரார்த்தித்தார். சிவபெருமான் மகிழ்ந்து, "சகல சற்குணங்களும் நிரம்பிய ஒரு புத்திரன் பதினாறு வயதுடையவனாய் நீ செய்யும் யாக பூமியில் உழுபடையின் மூலமாக வெளிப்படுவான்" என்று கூறி மறைந்தார். பின்னர் சிலாதமுனிவர் யாகஞ் செய்யப் பொன்னேர் பூட்டியாக சாலையை உழுதபோது அக்கொழுவின் மூலமாக ஒரு மாணிக்கப் பெட்டித் தோன்றியது. அதை முனிவர் திறந்து பார்த்தார். அதனுள்ளே நெற்றிக் கண்ணும், இளம்பிறைத் தவழுஞ் சடையும் நான்கு தோள்களுமாக விளங்குஞ் சிவமூர்த்தத்தைக் கண்டு மயங்கித் தோத்திரஞ் செய்து நின்றார். அப்போது சிவபெருமான் அசரீரியாக, "முனிவனே! அப்பெட்டியை மூடித்திற!" என்று கூறினார் அவ்வாறே மூடித்திறந்த பொழுது அவ்வெம்பெருமான் ஓர் இளங்குழந்தையாகி அழுதார். முனிவர் அக்குழந்தையை எடுத்து தமது மனைவியிடம் கொண்டு போய் பாலூட்டி வளர்த்து; செப்பேசுவரருக்குப் பதினாறு வயதுவர அவரது தாய் தந்தையர் தம் புத்திரரது அற்ப ஆயுளைக் குறித்து வருந்துவதை உணர்ந்து, "அஞ்சாதீர்கள், நாம் அழியாவரம் பெறுகிறேன்" என்று தேறுதல் கூறித் திருக்கோயிலை அடைந்து அயனரி தீர்த்த மத்தியினின்று அருந்தவஞ் செய்தார்.
சிவபெருமான் ரிஷபவாகனத்தின் மேல் உமாதேவியாரோடு எழுந்தருளி செப்பேசுவரனுக்கு நித்திய தேகந்தந்து அவரது திருமுடியின் மேல் திருக்கரம் வைத்து தீக்ஷ புரிந்து அவருக்குரிய பண்டைய சாரூப்பியமளித்து, திருநந்திதேவர் என்று அபிஷேகத் திருநாமஞ் சாத்தி, குருசதானம், விளங்க வேத சிவாகமங்களைச் சனத்குமாரர் முதலிய முனிவர்களுக்கு உபதேசிக்கக் கட்டளையிட்டார்.
பிறகு நந்திதேவனுக்கு சுயசை என்னும் கன்னிகையைத் திருமணம் புணர்த்திச் சிவகணங்களுக்குத் தலைவராயிருந்து சகல சிவாலயங்களிலும் அதிகாரஞ் செலுத்தும்படி சுரிகையும் பிரம்பும் கொடுத்தருளினார். முனிவர்களே! நந்தி எம்பெருமான் பார்வதி தேவியாருக்கு புத்திரராகத் தோன்றிய சரிதமுஞ் சொன்னேன் இது நிற்க! பொன்னிறத்துடன் வந்த பார்வதி தேவி திரிபுரதகனராகிய சிவபெருமானைச் சாஷ்டாங்கமாகப் பணிந்தாள், சிவபெருமான் முன் ஆடி என்னும் அசுரன் கூறியபடி அவன் தமையன் வரவில்லை பார்வதியே வந்தாள் என்று சந்தோஷத்துடன் வரவழைத்து ஆனந்தித்திருந்தார்.
சிறிது காலஞ்சென்ற பின் தாருகாவன முனிபத்தினிகள் பேரழகிகளாய், கற்பில் மேம்பட்டு இறுமாப்பு அடைந்தார்கள். அவர்கள் கற்பையழித்துக் கர்வபங்கம் செய்ய வேண்டுமென்று சிவபெருமான் நினைத்தார். பிரதம கணங்களுடன் பச்சைகர்ப்பூரம் முதலியன கூட்டிய விபூதியை உடல் முழுதும் உத்தூளனமாக அணிந்து, திகம்பரராய் (நிர்வாணராய்) மயிற்பிஞ்ச புஞ்சங்களைக் கையில் தாங்கி யோகதண்டத்தில் கட்கம் கதை முதலியன கட்டித் தொங்கவிட்டுப் பூர்ணச் சந்திர கண்டமோ வென்று சொல்லத்தக்க கபாலத்தைக் கரத்திலேற்று காந்தியும் யவுவனமுற்றுச் சென்றார். அவர் ஸ்தீரிகளைப் பிரமிக்கச் செய்து புன்சிரிப்பாகிய சந்தோஷத்தால் விநோதங்கள் காட்டிக் கொண்டு ஆகாயத்தில் தோரணமாகக் கட்டிய நீலமலர்களோ வென்று சொல்லத்தக்க மனோரம்மியமான திருமுகமும், முனிமங்கையர் மோக முறும்படிப் பார்த்து அசைந்து கொண்டிருக்கும் மதர்த்துப் பரந்த விழிகளும், பூரித்த தேகமும் செங்கமலம் போன்ற கரங்களும், பாதங்களும், நல்ல மலர் மாலைகளும், ஆபரணங்களுமுடையவராய்த் தாருகாவனத்தை அடைந்தார். பதினான்கு தோஷங்களற்றதும், மந்தரதார மத்திம ஸ்வரங்களுடன் கூடியதும், பலவகைத் தாளங்களையுடையதும், ஆரோகண அவரோகணாதி மூர்ச்சைகளையுடையதும் இசை ஏழினையுடையதுமாய்ப் பலவித பாஷா பேதங்களோடு கூடிய தோற்கருவி, துறைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக் கருவியோடு கூடிய தாயுள்ள கானத்தைப் பூதகணங்களோடு பாடிக்கொண்டும் சிறிது நேரம் ஆடிக்கொண்டும் ஆச்சரியமாகச் சிரித்துக் கொண்டும் நதிகளின் கரையில் வசித்துக் கொண்டும் தன்கணங்களிலொருவராக வந்திருக்கும் விஷ்ணு மூர்த்திக்குத் தன்சாந்த ரஸத்தோடு கூடிய நாட்டியத்தைக் காட்டிக் கொண்டுமிருந்தார்.
அவ்வாறிருக்கையில், வசிஷ்டர் மனைவியான அருந்ததியைத்தவிர மற்ற ரிஷிபத்தினிகள் அனைவரும் "இந்நிச்சலமான வனத்தில் யாரோ ஒருவன் ஒரு கிராத ஸ்திரீயுடன் வந்து மதுரமான திவ்யப் பாடல்களைப் பாடிக் கொண்டு முனிவர்கள் ஆச்சிரம மத்தியில் வெட்கமின்றி பிச்சையெடுக்கிறான். அழகோ அற்புதமானது!" என்று ஆலோசித்தார்கள். அப்பத்தினிகளில் சிலர் மோக மயக்கத்தால் மூர்ச்சித்தார்கள். சிலர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் பெருங்களிப்பால் கண்ணீர் விட்டார்கள். சிலர் காம விகாரத்தால் காம சேஷ்டை செய்து கொண்டுருந்தார்கள். சிலர் காமத்தால் உடை சேர்ந்தார்கள். இவ்வாறு அந்த ஸ்திரீகள் மன்மதாவஸ்தைப் பட்டுக்கொண்டு வசிஷ்ட பத்தினி நீங்கலாக மற்றெலோரும் காமக்கடலில் ஆழ்ந்து திகம்பரரோடு எவ்வாறாவது பேசவேண்டுமென்று சில வார்த்தைகள் பேசலானார்கள். "ஓ சுந்தரா! ஏன் இந்த தவவேடம் தரித்தாய்? இத்தவத்தால் யாது பயன்? தவத்தை போக சித்தி கருதிச் செய்கிறது உலகவழக்காதலின் அவ்வகைய போக சித்தியும் உனக்குப் பரதாரங்களாகிய எங்களால் சித்தியாகும் புண்ணிய ஹீனனாகிப் புருஷனை பரஸ்திரீகள் ஒரு போதுங் கோர மாட்டார்கள். நாங்கள் உன்னிடத்தில் பெருவிருப்புடையோமாதலின் எங்களை நீ புறக்கணிக்க வேண்டாம், அநேக புண்ணியத்தால் கிடைக்க வேண்டியது உனக்குச் சுலபத்தில் கைகூடும்போது விட்டுவிட வேண்டாம். திவ்விய தேகமுடைய உன்னைக் காணுந்தோறும் எங்களுக்கு கிருபை உண்டாகிறது!" இதுபோலப் பல பேச்சுகளைப் பேசிக் கொண்டும் இறைவன் பிக்ஷர்த்தமாகச் செல்லுகையில் அவரைப் பின் தொடர்ந்தும் ரிஷிபத்தினிகள் செல்லலானார்கள்.
அத்தாருகவன ரிஷிகளோ தங்கள் மங்கையர் கற்புநிலை தவறியவற்றை அறிந்து மனந்தாளாராய் பலவித சாப மொழிகளைப் பகர்ந்தார்கள். அவை சிவபெருமானைச் சிறிதும் நெருங்கவில்லை. ஆனால் வசிஷ்டரும் அருந்ததியும் திகம்பரராக வந்தவர் சிவபெருமானென்றும் உடன் வந்த மாது, மலையரசன் புத்திரி என்றும் கணங்களாக வந்தோர், விஷ்ணுவாதி தேவர்களென்றும் உணர்ந்து பலவிதமாகப் பூசித்தார்கள். சிவபெருமான் அகமகிழ்ந்து அருந்ததியை நோக்கி, "உன் கணவன் வாலிபனாகுக" என்று வரங்கொடுத்தருளினார். தாருகவன முனிவர்கள் திகம்பரனாகிய சிவபெருமானை ஒன்றுஞ்செய்ய இயலாதவர்களாய் தங்கள் சாபங்கள் பலியாவாயினும் அதற்குப் பதிலாகப் பலவித ரோகங்களாலும் வறுமையாதிகளாலும் துன்பங்களாலும் பீடிக்கப்பட்டவர்களாய் 'யாது செய்வோம்' என்றும் வசிட்ட முனிவரையும் பிரமதேவரையும் வினவி 'அது சிவ நிந்தையின் பலன்!' என்று உணர்ந்து சிவலிங்கார்ச்சனை செய்து சிவபெருமானின் திருவருளை அடைந்தார்கள்.
முனிவர்களே! இதனால் காம இச்சை சிவபெருமானைப் பாதித்ததென்று ஒருபோதுஞ் சொல்லக் கூடாது சப்தாதி விஷயங்களும், மாயா சம்பந்தமான போகங்களும் மாயையும் அச்சர்வேசுவரனிடத்து லயமடைய வேண்டியனவே யாதலின், காமரூபமான சாஞ்சல்லிய தோஷமானது ஆத்மஸ்வரூபியான பரமசிவத்துக்குத் தோஷமாகக் கொள்ளப்பட்டது. உலகத்தில் பதிவிரதா ஸ்திரீகளும் சித்தர்களாகிய புருஷர்களும் இருவரும் இல்லற தருமம் நடத்தி, சற்பாத்திரமாகிய அதிதிகளைப் பூஜிக்கிறார்களேயன்றி நீசர்களாயும் தனவான்களாயும், அஞ்ஞானிகளாயும், மோக்ஷ ஞானமில்லாதவர்களாயும், ரோகவான்களாயும், பதிதர்களாயும் காமக் குரோதாதிகளாயும் சீதோஷணங்களாலும் எப்போதும் துக்கமனுபவித்துப் புத்திர வாஞ்சை முதலிய விருப்பத்தால் மனோசஞ்சலப்பட்டுக் கொண்டு அதிதி பூஜை முதலிய சத் கருமங்களைச் செய்யாது காமத்தாற் பீடிக்கப்பட்டிருக்கும் தீயோரைப் போன்று இல்லறத்தை மேற்கொண்டவர்களல்லர். உலகத்தில் கிரகஸ்தாச்சிரமத்தைச் சார்ந்தவர்களில் சிவபெருமானையே அதிதியாகக் கொண்டு பன்னிரண்டு வருஷகாலம் ஆசனம் போஜனம் ஸ்நானம் முதலியவற்றினால் உபசரித்தவர்கள் வசிஷ்டரையன்றியாவர் இருக்கின்றனர். சிவபெருமானைக் கண்டு அவர் அழகில் மோகம் கொள்ளாத ரிஷிபத்தினிகளில் அவ்விசிஷ்ட முனிவர் மனைவியான அருந்ததியையன்றி யார் இருக்கிறார்கள்? இப்பொழுதும் உலகத்தில் விவாக காலத்தில் மணமக்கள் இருவரையும் அருந்ததியைப் பார்க்கச் சொல்லி, "இவ்வருந்ததியைத் தரிசித்தால் உனக்கு மகாபதிவரதா ஸ்வரூபமும் புத்திரபாக்கியம் முதலியனவும் உண்டாகும். இந்த அருந்ததி பூர்வத்தில் சிவபெருமான் யவுவன வேடந்தரித்துத் திகம்பரராய் வந்த காலத்திலும் மனங்கலங்காதக் கற்பினையுடையவள் ஆதலின் அவ்வருத்ததியைத் தரிசித்து என் கணவன் எப்பொழுதும் என்னிடத்தில் அன்புடையவராகவும் தனவானகவும், பிற மகளிரைக் கலத்தலின்றி என்னையே கூடிவாழ்ந்து சந்ததி விருத்தியை உண்டாகவுந்தயை புரியவேண்டும்" என்று கூறச்செய்து அவ்விருவரையும் நமஸ்கரிக்கச் செய்கிறார்கள்.
அவ்வருந்ததியின் கற்பின் பெருமையை யாதென்று சொல்லத் தகும்?! சிவபெருமானும் விஷ்ணு மூர்த்தியும் பிரமதேவனும் மற்றெல்லோருங் காமத்தின் வழி மனஞ் செலுத்தினவர்களேயாவர். மகரிஷிகளே! எல்லா முனிவர்கட்குஞ் சற்குருவும் பார்வதிநாயகனும் மதனவிகார சூனியனும் தேவ தேவனுமாகிய சிவபெருமானுடைய லீலா காம விகாரம் முழுவதையும் உங்களுக்குச் சொன்னேன் இன்னுஞ் சிலவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.
தொடரும்...🙏🏼
🕉️ஓம் நமோ பகவதே ருத்ராய!

0 Comments