🔔 கணக்கிலாத சிவ வடிவங்கள்
*சதா சிவ மூர்த்தி* . இருபத்தைந்து முகங்களும் ஐம்பது கரங்களும் கொண்ட பரம சிவனுக்கு சதாசிவ மூர்த்தி என்று பெயர். இது சிவலோக வடிவங்களில் ஒன்று.
🍁 *ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்பரன்* (திருமந்திரம்)
💥 *அப்பாலைக்கு அப்பாலை*,.
🌳 *முத்தி தந்து இந்த மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத்தன்* (திருவாசகம்)
⭐ *மால் முதல் வானவர்க்கு அப்பால் செல அன்பர்க்கு ஓக்கும் சிவன்* (திருக்கோவையார்)
🌼 *சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக் கீழ்* (திருவாசகம்)
என சதாசிவ வடிவம் நிலம் முதல் நாதம் வரையிலான முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட வடிவம். எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட, முக்தி பெற்ற ஆத்மாக்கள் சிவ கணங்களாகி ஈசனுடன் சேர்ந்து இருக்கும் ஒளிமயமான திருக்கயிலாயம் எனப்படும் சிவலோகத்து வடிவம்.
🌺 *நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் மருங்கே* (திருவாசகம்) என சிவ கணங்கள் தவிர அரி அயன் அம்மன் உள்ளிட்ட வேறு யாராலும் இவ்வடிவைப் பார்க்க முடியாது. தாயான அம்மையான அன்னையான மாதேஸ்வரன் சதா சிவத்திற்கு சதா சிவ நாயகி என்று பெயர்.
🌷 *அம்மையாய் நின்ற பேர் நந்தி தானே* (திருமந்திரம்)
☄ *தாதாய் மூவேழு உலகினுக்கும் தாயே* (திருவாசகம்)
⚜️ *சதா சிவம் தத்துவம்* (திருமந்திரம்) என தத்துவ நாயகி, சதா சிவ நாயகி என்பவை அனைத்து உலகங்களுக்கும் தாயான சதாசிவ ஈசன் திருநாமங்கள். இத்திரு நாமங்களைத் திருமூலர் போற்றுகிறார். திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் தாயுமானவர் துதிகள் உள்ளன. இவற்றை யெல்லாம் தற்கால அஞ்ஞானிகள் பராசக்தி துதி என்று மனம் போனபடி கூறி ஆகம சித்தாந்த நூலான திருமந்திரத்தின் தெய்வீகத்தைச் சிதைக்கின்றனர். திருமந்திரத்தில் வல்லமை ஆற்றல் என்று பொருள் தரும் சக்தி என்ற சொல்லுக்குப் பராசக்தி என்ற பெண் தெய்வம் என்று பொருள் கொள்கின்றனர். பரா சக்தி என்பதற்கு வெளியாற்றல் என்று பொருள். எல்லோருக்கும் அவரவர்க்கு என்று உள்ள ஆற்றல் தன்னாற்றல். பறவைக்கு பறக்கும் சக்தியும் மீனுக்கு நீந்தும் சக்தியும் தன்னாற்றல் என்பது போல எல்லாம் வல்ல கடவுள் *சிவபெருமானது தன்னாற்றலே சிவசக்தி* . *எதற்கும் யாரையும் சார்ந்து இலாத முழுத் தன்வயம் ஈசனது எட்டு குணங்களில் ஒன்று* . சிவ சக்தி என்ற சொல்லுக்கும் பெண் தெய்வமான உமையாளுக்கும் சம்பந்தம் இல்லை. இது எல்லாம் வல்ல ஈசனது எட்டு குணங்களில் ஒன்று. 🌺 *தன் அருளே அருளும் சேய நெடுங்கொடை* (திருவாசகம்) என எல்லையில்லாத ஈசனருள் சிவனருள் என்பது போல் *பரம சிவத்தின் எல்லையில்லாத சக்தி சிவசக்தி*. வெளியாற்றல் என்ற பொருளில் வரும் பராசக்தி என்ற சொல்லையும் பெண் தெய்வம் அம்பாள் என்றே தவறாகப் பேசுகின்றனர். பிற்காலத்தவர்கள் திருவாசகத்தின் ஒவ்வொரு பதிகத்திற்கும் மனம் போனபடி தப்பும் தவறுமாகக் கொடுத்த தலைப்புகள் குறிப்புத் தலைப்புகள் தலங்கள் வழி சென்று திருவாசகத்திற்குத் தாறுமாறாகப் பொருள் கூறுவது போன்றே திருமந்திரப் பாடலுக்கும் மனம் போனபடி தப்பும் தவறுமாகப் பொருள் கூறுகின்றனர். பெரிய புராணம் போன்று திருமந்திரத்திலும் பிற்சேர்க்கை இடைச்செருகல் உள்ளன. பிறரது அஞ்ஞானப் பாடல்களையும் தெய்வீகத் திருமூலர் பாடல்களையும் மிக எளிதாகப் பிரித்து அறிய முடியும் .
🌳⚜ ( *2* ) *திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்*
நாள்தோறும் சிவ பூசை புரிந்த யானை முக்தீசுவரனின் திருவருளால் பிறவாத நிலையாகிய முக்தி பெற்று சிவலோகம் சேர்ந்து சிவ கணம் ஆனது. சிலந்தி இரண்டு நாள் பந்தல் அமைத்த சிவப் பணியின் பயனாய்ப் பாராளும் சக்கர வர்த்தியாய் உயர் பிறவி பெற்றுச் சோழன் கோச் செங்கணான் ஆகப் பிறந்து உலகம் ஆண்டு திருவானைக்கா தரைக் கோயிலோடு மாடக் கோயில் எனப்படும் எழுபது பெரிய பெரிய கோயில்கள் கட்டியும் தில்லைக்குப் பொன் வேய்ந்து புதுப்பித்தும் தில்லை வாழ் அந்தணர்கள் வாழ மாளிகைகள் கட்டிக் கொடுத்தும் திருப்பணி செய்து முக்தி பெற்று சிவலோகம் சேர்ந்தது.
🌺 *முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட அத்திக்கு அருளி* (திருவாசகம்) (அத்தி – யானை)
☸ *சிலந்தியும் ஆனைக் காவில் திரு நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே கோச் செங்கணானுமாகக்
கலந்த நீர்க் காவிரி சூழ்ச் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனில் பிறப்பித்திட்டார் (அப்பர்
☘ *தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு* (சுந்தரர்)
⚜ *பெருக்காறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங் கோயில் எழுபது* (அப்பர்)
💥 *இருக்கு இலங்கு திருமொழிவாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக் குலத்து வளச் சோழன்* ,
☸ *செந்தமிழன் வடபுலக்கோன்* (திருமங்கை ஆழ்வார்)
என்று கோச்செங்கண் சோழச் சக்கரவர்த்தியின் ஆட்சியையும் பக்தியையும் திருப் பணியையும் இலக்கியங்கள் போற்றுகின்றன.
⚛ *செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர் கோன் அங்கட் கருணை பெரிது ஆயவனே* (சம்பந்தர்)
என *ஜம்பு லிங்கத்தின் அளவற்ற திருவருளால் கோச்செங்கணான் ஆட்சி புரிந்த பகுதியே ஜம்புத் தீவு* , நாவலந் தீவு (ஆசியமும் ஐரோப்பியமும் இணைந்த யுரேசியம்) எனப்பட்ட பண்டைக் கால பாரதம். *வெண்ணாவல் மரத்தடியிலேயே கர்பகிருகம் அமைந்துள்ள அரிய தலம்* திருவானைக் காவல். கருவறையின் பின் புறத்திலிருந்து மேலே கம்பிகளின் வழியே மரத்தைக் காணலாம். கோச்செங்கண் சோழன் சந்நிதி பிரகாரத்தில் உள்ளது.
ஜம்பு முனிவர் பூசையும் தவமும் புரிந்து நாவல் மரமாகி ஆனைக்கா அண்ணலுக்குத் தொண்டு புரிந்து முக்தி பெற்றுச் சிவலோகம் சேர்ந்தார்.
திருவானைக்காவில் பராசக்தி நாள்தோறும் தாமரை மலரால் சிவ பூசையும், சிவ பூசைக்குப் பால் தயிர் வெண்ணெய் நெய் திருநீறு என்ற பஞ்ச கவ்வியம் அளிக்கும் பசு பூசையும் புரிந்து வாழ்ந்தாள். நாவல் மரத்தடியில் யானை சிலந்தி ஜம்பு முனிவர் பராசக்தி ஆகியோர் சிவ பூசை செய்யும் காட்சி சுதைச் சிற்பங்களாக உள்ளது. சம்பு லிங்கக் கருவறைச் சுவற்றில் ஒன்பது சாளரங்களுக்கு மேலேயும் தூண்களிலும் கல் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.
🌸 *இன் மொழித் தேவி பாகம் ஆயினான் ஆனைக்காவில்* (சம்பந்தர்)
இன்மொழித் தேவி (சுபாஷினி, மதுர பாஷினி) என்ற பெயருடன் இரண்டு கரங்களில் தாமரை மலர் தாங்கி சிவ பூசை செய்யும் அம்மனுக்குச் சந்நிதி ஜம்பு லிங்கப் பரம்பொருளுக்கு எதிர்ப் புறம் பரமனை நோக்கியவாறு பிற்காலத்தில் கட்டப்பட்டது.
🍀 *தாதாய் மூவேழு உலகினுக்கும் தாயே*
🌷 *மூவுலகுக்கு அன்னையும் அத்தனும் ஆவர்* (அப்பர்)
💥 *அவனித் தாய் என நின்று உகந்த தலைவன்* (சம்பந்தர்)
🌸 *தந்தை தாய் உலகுக்கு* (சுந்தரர்)
என அகிலாண்டேசுவரன் என்பதன் பெண்பாலான அகிலாண்டேசுவரி விண்ணுலகம் மண்ணுலகம் பாதாள உலகம் ஆகிய *எல்லா உலகங்களுக்கும் இருருபத்தோரு உலகங்களுக்கும் ஒரே இறைவியான தாயுமானவரை மாதேஸ்வரனைக் குறிக்கும் சிவ நாமம்.* தற்காலத்தில் அம்மனுக்குக் கற்பனையாக வழங்குகின்றனர். *அகிலாண்டேஸ்வரி அங்காள பரமேஸ்வரி என்றெலாம் எந்த அம்மனும் இல்லை*. நித்ய சிவ பூஜை செய்யும் பக்தையான பராசக்தி தினமும் செய்யும் சிவ பூசையைக் காட்டும் வகையில் அர்ச்சகர் நாள்தோறும் அம்மன் வேடம் அணிந்து ஜல கண்டேசுவரரையும் கோ மாதாவையும் பூசிக்கிறார். *பரா சக்தி சிவ பூசையும் தவமும் புரியும் அடியவராக சிவ பக்தையாகத் தனிச் சந்நிதியில்* இருப்பதால் , *சிவம் தானே இறைவனாகவும் இறைவியாகவும் இருக்கும் இறை ஆதலால் சிவாலயங்களைப் பற்றி பேசும்போது சமேத உடனுறை இறைவி என்றெல்லாம் கூறிச் செல்வது* அங்கம் இல்லாத லிங்கப் பரம் பொருள் மூலவராய் உள்ள சிவாலய அமைப்பிற்கும் கடவுள் பண்பிற்கும் *அருட்கோயில் வரலாற்றுக்கும் முற்றும் மாறுபட்ட தவறான கற்பனையே*. அம்மன் கையில் காவிரி நீர் லிங்கமானது என்பதும் பொய். அகிலாண்டேசுவரி என்ற பெயரும் பொய். இறைவி என்பதும் பொய். ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி கோயில் என்பதும் பொய். சந்நிதிக்கும் கோயிலுக்கும் வேறுபாடு தெரியாத சிவ விரோதிகள் பேசும் பொய். தண்ணீர் உருவம் இல்லாத ஒரு பொருள்.

0 Comments